லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் வம்சாவளியான கனடிய தொழிலதிபர் தஹாவூர் ரானா. 59 வயதான இவர் கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலை அரங்கேற்றிய பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு லஷ்கர்-இ-தொய்பாவுக்கு, பொருட்களை வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ரானாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், 2011 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சல் சிறையில், சிறை தண்டனை அனுபவித்த தஹாவூர் ரானாவுக்கு உடல்நிலை மோசமடைந்ததாலும், கொரோனா உறுதி செய்யப்பட்டதாலும் கருணையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும், அவர் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு நாடு கடத்த படலாம் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தஹாவூர் ரானா எதிரான வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.