இந்தியாவுடனான எல்லை விவகாரத்தில் சீனா முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும் பள்ளத்தாக்கில் திங்களன்று இரவு ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்களும் மரணமடைந்துள்ளனர். அதேபோன்று சீன ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தற்போது சீனாவின் மோசமான தாக்குதல் குறித்து விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மிகவும் முரட்டுத்தனமாக சீன கம்யூனிஸ்ட் கட்சி நடந்து கொள்கின்றது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினையை அதிகரித்து வருகின்றது. அதோடு தென்சீனக் கடலை இராணுவமயமாக்கி சட்டத்திற்குப் புறம்பாக நிலப்பரப்பை கோரி வருகின்றது. முக்கிய கடல் பாதையிலும் தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகின்றது. அதுமட்டுமின்றி கொரோனா குறித்து பொய் கூறி மற்ற நாடுகளுக்கும் பரவச் செய்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர் உலகத்தின் பொருளாதாரமே பாதிப்படைந்துள்ளது” என விமர்சனம் செய்துள்ளார்.