புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இதுவரை கொரோனோவால் 338 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 131 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 7 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே புதுச்சேரியில் தப்பியோடிய குற்றவாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ரமணா என்ற வாலிபர் வாகன திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று மாலை கொரோனா சோதனை நடைபெற்ற நிலையில் நேற்று இரவு சிறையில் இருந்து தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து இன்று சோதனை முடிவுகள் வெளியான நிலையில் தப்பியோடிய கைதிக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி மத்திய சிறையில் ஏற்கனவே ஒரு கைதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு குற்றவாளிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்