கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள் என மத்திய ஆளும் கட்சியின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக்கி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், சகாக்களும் நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரின் கருத்து ராணுவ அதிகாரிகள், வெளியுறவுத்துறை அறிக்கையில் இருந்து முரண்படுவதாக கமல் குற்றம் சாட்டியுள்ளார்.
சீனா ஊடுருவல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் பேசியது பற்றி கமல்ஹாசன் அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளார். அதிகமுறை சீனா சென்று வந்த உங்களால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க முடியாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். சீன அதிபரை இந்தியாவுக்கு அழைத்து நட்புறவை வளர்க்க நடத்திய பேச்சுவார்த்தை உதவவில்லையா? எனவும், நட்புறவை வளர்க்க எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் உள்களது முயற்சி தோல்விதானா? என பல்வேறு கேள்விகளை தனது அறிக்கை வாயிலாக கேட்டுள்ளார்.