அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு காய்ச்சல் குறையாததால் அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் 2வது சோதனையில் அமைச்சருக்கு கொரோனா இல்லை என மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று காலை வந்த நிலையில் அமைச்சருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட 2வது சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றே வந்துள்ளது. சென்னையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக 6 அமைச்சர்கள் கொண்ட குழு தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.