விராட் பல சாதனைகளை முறியடிக்க போவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்
விராட் கோலி ஸ்டீவ் ஸ்மித் என இருவருமே களத்தில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாகவே ரசிகர்களால் அறியப்படுகின்றனர். கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஸ்டீவ் ஸ்மித் 12 மாதங்கள் விளையாட்டில் இருந்து விலகி இருந்து பின்னர் மீண்டும் திரும்பிய போது அவருக்கு ஆதரவளித்த முக்கியமான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. ஸ்டீவ் ஸ்மித்தும் பல சமயங்களில் விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டீவ் ஸ்மித் கூறியிருப்பதாவது, களத்திற்கு வெளியே விராட் கோலியுடன் சில நேரங்களில் பேசியிருக்கிறேன்.
சமீபத்தில் இந்தியாவில் நிலை எப்படி இருக்கின்றது என செய்தி அனுப்பி இருந்தேன். அவர் மிகவும் அற்புதமான நபர். எங்களின் அணிக்காக நாங்கள் இருவருமே மிகவும் கடுமையாக ஆடுபவர்களே. அது ஆட்டத்தின் ஒரு பகுதிதான். உலகக்கோப்பை விளையாட்டின்போது டேவிட் வார்னரையும் என்னையும் கேலி செய்த இந்திய ரசிகர்களை விராட் அமைதியாக இருக்கும்படி சொன்னதற்கு அன்றே நான் அவரிடம் நன்றி கூறினேன்.
அவரது பேட்டிங் திறமை மிகவும் அசாத்தியமானது. மூன்றுவிதமான ஆட்டங்களில் அவர் திறமையானவர். இனிவரும் காலங்களில் பல சாதனைகளை அவர் முறியடிக்கப் போவதை நாம் காண்போம். ஒரு அணியின் சிறந்த கேப்டனாக இந்தியாவை டெஸ்ட் உலகில் முதல் இடத்தை பிடிக்க செய்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் வருவது மிகவும் விசேஷமானதாக இருக்கும் நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறியுள்ளார்.