சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களாக உள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்யதியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு உதவ சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் தலா 2 மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது என தகவல் அளித்துள்ளார். சென்னையில் மருத்துவ முகாம்கள் நடக்கும் இடங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம் நடைபெறும் இடம் குறித்து தெருக்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 36,500 பேருக்கு காய்ச்சல் உள்ளதா என்று ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது என்றும் சென்னையில் 11 ஆயிரம் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்றும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.