கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் போன்றவற்றை எந்த பரிசோதனை அடிப்படையில் மக்களுக்கு வாங்குகிறீர்கள்? என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
அங்கீகரித்த சித்த, ஆயுர்வேத மருத்துவர்கள் கொரோனவாவிற்காக கண்டுபிடிக்கும் மருந்துகளை பரிசோதிக்க என்ன நடைமுறை உள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மருத்துவ லாபி என்பது இயற்கை மருத்துவத்தை அழித்து விடுமோ எனும் அச்சம் எழுந்துள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வழக்கு விவரம்:
சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கூடிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மதுரையை சேர்ந்த சித்தமருத்துவர் இது தொடர்பான பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அவர்கள் பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவதாலே நோய் தொற்று குறைக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் பழங்காலம் முதலே பயன்பாட்டில் உள்ள சித்த மருத்துவத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க பலரும் முயன்று வருகின்றனர்.
அதனடிப்படையில் முடக்கத்தான் இலை, வெட்டிவேர், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 66 மூலிகைகள் கொண்டு நோய்எதிர்ப்பு சக்தி தன்மை கொண்ட மருத்துவப்பொடிகள் தயாரித்துள்ளேன். இந்த மருந்து உடலில் எந்த விதமான தீங்கையும் ஏற்படுத்தாது. இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அதனை பரிசோதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரசாத் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. கொரோனாவுக்கு மருந்து தேடி அலையும் நிலையில், சித்த மருத்துவர்கள் கண்டுபிடித்த மருந்துகளை இதுவரை பரிசோதிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி வழக்குவிசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.