சொத்துக்காக தாய் மற்றும் மகளை கொலை செய்த பெண் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள அய்யலூர் இளங்கோ நகரை சேர்ந்த தமிழரசன் என்பவரின் மனைவி ராணி.. இவருக்கு வயது 60 ஆகிறது.. தமிழரசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருக்கு வள்ளி(35) மற்றும் ராஜேஸ்வரி (32) என்ற இரு மகள்கள் உள்ளனர்.. இதில் வள்ளி என்பவர் அதே ஊரை சேர்ந்த ராம்குமாரை திருமணம் செய்து விட்டார்.. அதேபோல ராஜேஸ்வரி அதே ஊரை சேர்ந்த சங்கர் என்பவரை திருமணம் செய்து விட்டார்.. இவர்கள் இருவரது கணவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.
ராஜேஸ்வரி தன்னுடைய தாய் ராணி வீட்டில் தங்கியும், வள்ளி தனது மகனுடன் தனியாக வீட்டிலும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 19ஆம் தேதி காலை வெகு நேரமாகியும் ராணியின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை.. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.. அப்போது ராஜேஸ்வரி வீட்டின் முன் அறையில் இறந்து கிடந்துள்ளார். வீட்டின் மேல் மாடியில் தாய் ராணி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் ராணியை உடனடியாக மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே ராணி இறந்து விட்டார். இது குறித்து புகாரளிக்கப்பட்டதன் பேரில் மருவத்தூர் காவல்துறையினர் மர்மமான முறையில் இருவரும் இறந்து கிடந்ததால் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து எப்படி இறந்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வள்ளிக்கு அதிகளவில் கடன் ஏற்பட்டிருந்ததால் தன்னுடைய தாய் ராணியிடம் சென்று எனக்கு பணம் தேவைப்படுகிறது. அதனால் உன்னிடமிருக்கும் 2 ஏக்கர் நிலத்தை விற்று பணம் தரவேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்..
ஆனால் ராணி சொத்தை விற்று பணம் தரமுடியாது என்று கூற, தங்கை ராஜேஸ்வரியும் சொத்தை விற்பதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் தாய் ராணி மற்றும் தங்கை ராஜேஸ்வரியுடன் வள்ளி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த வள்ளி மற்றும் 14 வயது சிறுவன் ஆகியோர் கடந்த 19ஆம்தேதி அதிகாலை 4 மணியளவில் தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று வீட்டின் மேல்மாடியில் உறங்கிக்கொண்டிருந்த ராணிக்கு இருமல் மருந்து என கூறி மருந்துடன் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர்.. பின்னர் வீட்டிற்கு உள்ளே படுத்து கிடந்த ராஜேஸ்வரியின் கையை கயிறால் கட்டிப்போட்டு போர்வையால் முகத்தை அழுத்தியும், கயிற்றால் கழுத்தை நன்கு இறுக்கியும் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் காவல்நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுகந்தி வழக்குப்பதிந்து சொத்துக்காக தாய் மற்றும் மகளை கொலை செய்த இன்னொரு மகள் வள்ளி மற்றும் கொலைக்கு துணை போன 14 வயது சிறுவன் ஆகிய 2 பேரைரையும் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி அசோக்பிரசாத் இருவரையும் 15 நாள் சிறையிலடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வள்ளி பெரம்பலூர் கிளை சிறையிலும், சிறுவன் திருச்சியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.