மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி தர்மேந்திர பிரதாப் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய கொரோனா தடுப்பு அதிகாரியாக சந்திர மோகனை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பு 705 ஆக அதிகரித்துள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 381 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 318 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் நாளை முதல் வரும் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரையில் முழு ஊரடங்கில் தேனீர் கடைகள், ஆட்டோக்கள், டாக்சிகளுக்கு அனுமதி இல்லை, 33 சதவீத ஊழியர்களுடன் அத்தியாவசிய பணி சார்ந்த அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி, ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி, மளிகை,காய்கறி,பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.