கொரோனவை கட்டுப்படுத்த மாவட்டங்களில் கடும் நடவடிக்கைகளை எடுங்கள் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மிக முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும். கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைகளை பொறுத்தவரை அதிக அளவில் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். கொரோனா உறுதி செய்யப்பட்டருடம் தொடர்பில் இருந்த அனைவருமே பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் தொடர்பான முகாம்களையும் அமைக்க வேண்டும்.
கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை யாரையும் புறக்கணிக்கக் கூடாது, அவர்கள் அனைவருக்கும் சோதனையை மேற்கொள்ள வேண்டும். ஒரு தெருவில் இரண்டு, மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அந்தப் பகுதியை நோய் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றி, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகள் ஆகட்டும், பொதுமக்கள் கூட கூடிய இடங்கள் ஆகட்டும், அந்த பகுதியில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தக்கூடிய பணியை அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக மேற்கொள்ள வேண்டும்.
முக கவசம் அணிந்து செல்ல பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும், பொதுமக்கள் அணியவில்லை என்றால் அவர்களுக்கு தேவையான தனிமைபடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.அதே போல ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார், அவர்களுக்கும் இதே போன்ற கடிதத்தை தலைமை செயலாளர் அனுப்பியுள்ளார்.