கோவையில் வாயில் காயம்பட்டதால் அவதிப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி வட்டாரம் ஜம்புகண்டி மலைக்கிராமம் அருகே 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை நேற்று முன்தினம் முதல் சுற்றி திரிந்து வந்தது. இதைடுத்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சுரேஷ் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று யானையை கண்காணித்தனர்.
அதில், யானைக்கு வாயில் காயம் இருப்பது தெரியவந்துள்ளது. காயத்தை குணமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் டாக்டர் சுகுமார் தலைமையில் வலி நிவாரணி மாத்திரைகள், பலாப்பழம் மற்றும் வாழைப்பழத்தில் வைத்து இன்று காலை வழங்கப்பட்டது. வாய்ப்புண்ணை குணமாக்கும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் வழங்கப்பட்டன. ஆனாலும் யானையின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இதனிடையே தொடர்ந்து அளித்து வந்த சிகிச்சை பலனளிக்காமல் யானை உயிரிழந்தது. இந்த யானை 10 நாட்களுக்கு முன் மூங்கில் அல்லது மரத்தின் குச்சியால் காயம் ஏற்பட்டு சீல் பிடித்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த யானைக்கு இன்று உடற்கூறாய்வு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.