டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் கொரோனா தீவிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 59,746 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 33,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனோரால் இதுவரை 2,175 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில், கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளார்.
முன்பு தினசரி 5 ஆயிரம் சோதனைகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது 18,000 சோதனைகள் செய்யப்படுவதாக தெரிவித்தார். ஒவ்வொரு நோயாளிக்கும் ஆக்ஸிஜன் பரிசோதனை மீட்டரை வழங்க உள்ளதாகவும், ஆன்டிஜென் என்கிற 15 நிமிடங்களில் முடிவை அறியும் விரைவான பரிசோதனையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் தகவல் அளித்த அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போர்க்கால அடிப்படையில் படுக்கைகளை தயார் செய்து வருவதாகவும், தற்போது வரை 7,000 படுக்கைகள் தயாராக உள்ளதாக முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.