கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் , நடப்பு கல்வியாண்டிற்கான பாடங்கள் ஆன்லைன் மூலமாக தற்போது தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
வழக்கு விவரம் :
இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக அதிக நேரம் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு உடல், மனரீதியிலான பாதிப்பு ஏற்படும் என விமல்மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைனில் கற்பிக்கவும் தடை விதிக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே ஆன்லைனில் கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களுக்கு கண்ணில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
ஆன்லைன் வகுப்புக்களால் மாணவர்களின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக ஆன்லைன் வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.