இந்தியா-சீனா ராணுவத்தை சேர்ந்தவர்கள் தங்களது முகாமிற்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது படைகளை திரும்ப பெற்றனர். இதையடுத்து எல்லைப் பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் லடாக் எல்லையில் நிலவும் சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்ய ராணுவ தளபதி முகுந்து நரவனே இன்று லடாக் சென்றுள்ளார். இதனிடையே இந்தியா – சீனா இடையே பேசுவதை நடைபெற்றது.
மோல்டோவில் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய ராணுவம், லடாக் எல்லை தொடர்பாக சீனா – இந்தியா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது என தகவல் அளித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் 2 ராணுவத்தை சேர்ந்தவர்களும் தங்களுடைய முகாமிற்கு திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 2 நாட்டு படைகளை விலக்கிக் கொள்வதற்கான நடைமுறைகள் தொடர்ந்து விவாதிக்கப்படும் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த பழனி என்றவர் வீர மரணம் அடைந்துள்ளார். இந்த சூழலில் சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் இன்று மாலை 6.30 மணிக்கு ராணுவ விமானம் மூலம் மதுரை வந்தடைகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்துக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் நேரில் ஆறுதல் அளித்துள்ளார்.