Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு… இரு எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்..!!

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜுக்கும் வாக்குவாதம் மூண்டது. இதனை கண்ட பென்னிக்ஸ் போலீசாருடன் சமாதானம் பேச முயன்ற போது, கைகலப்பு வரை சென்றுள்ளது. இதையடுத்து, விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக தெரிவித்தார். இதையடுத்து சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அரசு மருத்துவமனையில் பென்னிக்ஸ்-ஐ சேர்ந்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி பென்னிக்ஸ் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தை ஜெயராஜுக்கும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலை ஜெயராஜ் உயிரிழந்துள்ளார். இருவரின் உடலும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறைச்சாலை முன்பாக பொதுமக்கள் பலமணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர், சாத்தான்குளத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ததாக கூறிய நிலையில், இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |