டெக்சாமெத்தசோன் மாத்திரைகளை அதிக உற்பத்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்துள்ளது. அதில் 49 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் டெக்சாமெத்தசோன் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளில் 35% பேரையும் அதிக ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் 20% பேரையும் உயிரிழப்பிலிருந்து காப்பாற்றி உள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் உயிரை காப்பாற்றும் மாத்திரைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கூறுகையில் “டெக்சாமெத்தசோன் மாத்திரை ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் தன்மை கொண்டுள்ளது. இந்த மாத்திரைகளை அதிக அளவு உற்பத்தி செய்து உலக நாடுகள் முழுவதும் கொண்டு செல்வதே நமது அடுத்த சவாலாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, கொரோனா வேகமாக பரவுகின்றது என்றும் ஊரடங்கு தளர்வுகளை உலக நாடுகள் மிகவும் கவனமாக கையாள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐந்து மாதங்களுக்கு மேலாக வைரஸ் பாதிப்பிலிருந்து உலகநாடுகள் விடுபட முடியாமல் மிகவும் திணறுகின்றன. பல நாடுகளில் இன்னும் ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து வருகின்றது இதுவரை தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததால் தொற்றை கட்டுப்படுத்துவது விஞ்ஞானிகளுக்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கும் சவாலாகவே உள்ளது.