ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ரூ. 3.75கோடி மதிப்பில் புதிய மணிக்கூண்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்கள் குறைவாக இருப்பதால் பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதற்கென முதல்வர் ஆணையின் படி 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், கிரேடு முறையைத் தற்போது அரசு பரிசீலித்து வரும் நிலையில் இதுகுறித்து நேற்று முதல்வரை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடந்து சுழற்சி முறையில் வகுப்புகளை செயல்படுத்துவது குறித்து இன்னும் யோசிக்கப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதென்பதை அக்குழு அறிந்து கவனத்திற்கு கொண்டு வந்த பின் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.