75% தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதம் கழித்து ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்
உலக நாடுகளிடையே பரவி வந்த கொரோனா தொற்று ஆஸ்திரேலியாவில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் “ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்று விக்டோரியா. அந்த மாகாணத்தில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட தொடங்கியுள்ளது. ஒரே நாளில் அங்கு 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்” என செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இதுவரை விக்டோரியா மாகாணத்தில் 241 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தாகவும், தொற்றின் இரண்டாம் பரவல் தொடங்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 75% கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு முடியும் வரை எல்லை தடுப்பை தொடர இருப்பதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்திருந்தது.
இதுவரை அந்நாட்டில் 7,492 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு 6,915 பேர் குணமடைந்த நிலையில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் தொற்றை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாகவே இருந்து வருகின்றது. பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முக கவசம் அணிவதும், அவ்வப்போது கைகளை கழுவுவதும், முறையாக சமூக இடைவெளியை பின்பற்றுவதுமே தற்போது தொற்று பரவலை தடுக்க ஆலோசனையாக கூறப்பட்டு வருகின்றது.