உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 25 கோடி பேர் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது. மது மற்றும் புகையிலை பொருட்களை உபயோகிப்பது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில் கஞ்சா, கோக்கைன், பிரவுன் சுகர் ஆகியவை கரையான் புற்று போல் இளைஞர் சமூகத்தை அழித்து வருகின்றன. கட்டுக்கோப்பான உடலை வைத்திருக்க வேண்டிய இளமைப் பருவத்தில் நரம்பு தளர்ந்து உடல் சோர்ந்து போய் கிடக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது.
தனிநபரின் உடல், மனம் இரண்டையும் சிதைப்பதுடன் சமூகத்துக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன இந்த போதைப் பொருட்கள். இந்தப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியாது என்ற சூழலில் தற்கொலைகளில் போய் முடிகின்றன. இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கத்தை பரவ செய்வதற்கென்றே கும்பல்கள் இருக்கத்தான் செய்கின்றன. போதைப்பொருட்களை உபயோகித்த பின்னரும், அவற்றை வாங்க பணம் கிடைக்காத போதும் இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து போதை பழக்கத்தின் தீமையை அவர்களுக்கு உணர்த்துவது அவசியம். அவர்களை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படவேண்டும். போதைப்பொருள் கடத்தல் விற்பனை செய்தல் ஆகியவற்றை ஒழிக்க கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். உலக நாடுகள் என்ன முயற்சிகளை எடுத்தாலும் அதையும் மீறி போதை பயன்பாடு அதிகரித்து இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. போதை பொருட்களால் தனக்கும் சமூகத்திற்கும் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியம்.