முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனால், கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக தமிழக அரசு மதுரை மாவட்டத்திலும் முழு ஊரடங்கு 24ம் தேதியில் இருந்து அமலாகும் என அரசாணை பிறப்பித்திருந்தது. இதையடுத்து 23ம் தேதி நள்ளிரவு முதல் மதுரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு மக்களுக்கு உரையாற்றிய முதல்வர், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள மதுரையில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்காக நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.