சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர்.
இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விதி முறைகளை மீறி கடை நடத்தி வந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து இன்று நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்பி தாக்கல் மின் அஞ்சல் வழியாக தாக்கல் செய்துள்ளார். உடற்கூறாய்வு முடிந்து அறிக்கை தயாராக உள்ளது, ஊரடங்கால் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய இயலவில்லை என அரசு தரப்பு பதில் அளித்துள்ளது.