கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கை தமிழக அரசு முறையாக அமல்படுத்தியதால் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் ஆலோசனைகளை தமிழக அரசு செயல்படுத்துகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், திருச்சியில் நவீன உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், திருச்சி சிப்காட்டில் ரூ.200 கோடியில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார்.
அதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுதவிர திருச்சியில் 6128 சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.269.82 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சியில் மட்டும் 5 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்துள்ளது.
கொள்ளிடத்தில் ரூ.495 கோடியில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முக்கொம்பில்ரூ.387 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்த தடுப்பணை கட்டும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளது. இதுதவிர, இந்த ஆண்டு 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பன போன்ற விஷயங்களை தெரிவித்தார்.