தமிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ரூ. 2,000 கோடி மதிப்பில்பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்டம் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. பாரத்நெட் ரூ.1950 கோடியில் 12,524 கிராமங்களில் அதிவேக இன்டர்நெட் இணைப்பு தர கொண்டு வரப்பட்டது. இதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்., 14ம் தேதி இதில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு விதிகளை மீறி நடைமுறைப்படுத்தியது.
இதுகுறித்து ஏப்., 20ம் தேதி திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு புகார் அளித்த நிலையில் ஜூன் 23ம் தேதி விசாரணை நடைபெற்றது. அதில் ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திற்காக தமிழக அரசு டெண்டர் விதிமுறைகளில் மாற்றம் செய்து முறைகேடு செய்தது தெரியவந்தது. கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது.
விசாரணையின் போது தமிழக அரசு உரிய விளக்கமும் அளிக்கவில்லை. பாரத் நெட் டெண்டர் அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பாரபட்சம் கட்டப்படுவதாகவும் திமுக மற்றும் அறப்போர் இயக்கம் அளித்திருந்த நிலையில் இன்று தமிழகத்தின் பாரத் நெட் என்ற இன்டர்நெட் திட்ட டெண்டரை ரத்து செய்வதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.