தமிழகத்தில் பள்ளிகளை தற்போது திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே பள்ளிக்கூடங்களை திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் கல்வி தொடங்குவது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் கடந்த 3 மாதங்களாக மூப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களின் இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் 11,12ம் வகுப்புகளின் விடுபட்ட பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் இன்றி மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகளும் கொரோனா பரவல் காரணமாக தடைபட்டுள்ளது. இதனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழும்பியுள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்றும், ஆன்லைன் வகுப்புகள் குறித்து விரைவில் தகவல்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.