பட்டினியால் உயிரிழந்த 4 வயது சிறுமியின் சடலம் எலி தின்று அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது
ஆஸ்திரேலியாவில் இருக்கும் பிரிஸ்பேன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. எலிகள் தின்று பாதி அழுகிய நிலையிலையே சடலம் மீட்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை ஜேம்ஸ் மற்றும் வளர்ப்புத் தாயான ஷானன் ஆகிய இருவர் மீதும் கொலை குற்றம் சுமத்தப்பட்டது.
காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சிறுமி உணவு ஏதும் இன்றி மருத்துவ உதவியும் இல்லாமல் உயிரிழந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. உடலை பிரேத பரிசோதனை செய்ததில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ஏராளமான உடல் பிரச்சனைகளை குழந்தை அனுபவித்து வந்ததும் தெரியவந்துள்ளது. சிறுமி பிறந்ததும் அவரது தாய் இறந்துவிட வளர்ப்பு தாய் மற்றும் சகோதரியுடன் இருந்து வந்துள்ளார் வில்லோ.
கடந்த ஒரு வருடமாகவே குடியிருப்புக்கு வெளியே சிறுமி தென்படுவதில்லை என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். பட்டினியால் சிறுமி உயிரிழந்தாள் என்பதும் சிறுமியின் உடலை எலி தின்றது என்பதும் அப்பகுதி மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை இனி வரும் நாட்களில் நடைபெறும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.