40 வினாடிகளில் இளம் விமானியின் செயலால் நடக்க இருந்த பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியுள்ளது
பிரான்ஸில் இருக்கும் பெர்கெராக் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம் தானியங்கி பாதுகாப்பு அமைப்பினால் மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. சம்பவம் நடந்த அன்று வானம் அதிக அளவு மேகமூட்டத்துடன் தென்பட்டதால் விமானி குறிப்பிட்ட விமானத்தை மிகவும் தாழ்வாக செலுத்தியுள்ளார். 842 அடி மட்டுமே விமானத்திற்கும் தரைக்கும் இடையே இருந்த இடைவெளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு நிமிடங்கள் தாழ்வாகவே விமானம் பறந்த நிலையில், திடீரென விமானத்தின் தானியங்கி பாதுகாப்பு அமைப்பு விமானத்தை மேலே கொண்டு செல்ல எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை உடனடியாக உயரப் பறக்க செய்துள்ளார். தானியங்கி அமைப்பின் எச்சரிக்கையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் 40 வினாடிகளில் பெரும் விபத்தில் அந்த விமானம் சிக்கியிருக்கும் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆபத்தான சம்பவம் இரண்டாவது விமானியின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நடந்ததாகவும் தெரியவந்துள்ளது. தரையிறங்குவதற்கு விமானம் ஆயத்த கட்டத்தில் இருந்தபோது தானியங்கி பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை கொடுத்ததும் சுதாரித்துக் கொண்ட விமானி 4000 அடி உயரத்திற்கு விமானத்தை உயரப் பறக்க செய்துள்ளார். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு 166 பயணிகளுடன் ஆறு ஊழியர்களுடன் அந்த விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியது.