சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையை வில்லனாக சித்தரிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, அப்பாவிகளுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டப்படுவதாக ஆதங்கம் எழுந்துள்ளது. அதேநேரம் காவல்துறையினருக்கு ஆதரவாகவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. காவல்துறை ஹீரோவா ? வில்லனா என்பது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். காவல்துறை மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல மாதங்களுக்கு முன்பு வெளியான வீடியோ இப்போது மீண்டும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு வீடியோவில் குடிபோதையில் இளைஞர் ஒருவர் காரை வேகமாக ஓட்டி வந்து, ஆட்டோ மீது மோதியது தெடர்பாக காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் வசை பாடினார். அமைச்சர் சிவி சண்முகத்தின் மகன் என கூறியவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவரை போலீசார் தொடவில்லை என கூறப்பட்டது. பின்னர் அவருக்கு போதை தெளிந்த பிறகு விசாரித்தபோது அவர் அமைச்சரின் மகன் இல்லை என தெரிய வந்ததும், அவருக்கு கையில் மாவு கட்டு போடப்பட்டது. இது காவல்துறையின் இரட்டை நிலையைக் காட்டுவதாக விமர்சிக்கப்படுகிறது.
இதேபோல் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஒருமுறை காவல்துறை உத்தரவுக்கு கட்டுப்பட முடியாது என்று கோரியும், சென்னை உயர் நீதிமன்றம் பற்றி இழிவாக பேசியதாக வீடியோ ஒன்று வெளியானது. அப்போது, ஹெச் ராஜா மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அண்ணாச்சி, அண்ணாச்சி என அவரிடம் கெஞ்சிதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. காவல்துறை மீதான இதுபோன்ற விமர்சனங்களில் நியாயம் இருப்பது போல் தெரிந்தாலும், மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு உயிரையே தியாகம் செய்த காவல்துறை மறந்துவிடமுடியாது.
கொரோனா பரவல் ஆரம்ப கட்டத்தில் இருந்தபோது அரசின் உத்தரவை மீறி வெளியே வந்த மக்களை காலில் விழுந்து கும்பிடுகிறேன் தயவுசெய்து வெளியே வராதீர்கள் என கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார் சென்னை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராசி. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரத்தம் இருப்பு இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணி பெண் சுலோச்சனா என்பவருக்கு தானாக முன்வந்து ரத்தம் கொடுத்து பிரசவம் நல்ல முறையில் நடைபெற உதவினார் காவலர் ஜாகீர் அபுதாகிர். இதுபோன்ற நற்செயல் மட்டும் இல்லாமல் மக்களுக்காக தங்களது உயிரை கொடுத்த காவல்துறை அதிகாரிகள் ஏராளம்.
ராஜஸ்தான் கொள்ளையர்களை பிடிக்க வாலி மாவட்டத்தில் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய காவலர் ஜெகதீஷ் மணல் கடத்தலை தடுக்க முயன்ற போது இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது தலைமை காவலர் முனிசாமி கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக வந்த தகவலையடுத்து குற்றவாளிகளை பிடிக்க சென்ற தலைமை காவலர் கனகராஜ் டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டார். சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுனன் சரவணன் காவல்துறை மக்களின் நண்பன் என்பதை தொடர்ந்து பறைசாற்றி வருகிறார்.
இப்படி காவல்துறையினரின் தியாகங்களை அடுக்கிக்கொண்டே செல்ல முடியும். இருப்பினும் சிலர் செய்யும் தவறான காரியங்கள் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடுகிறது. எனினும் சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றத்தின் அடிப்படையில் தவறிழைத்த காவல்துறையினர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்வது காவல்துறையை மக்கள் தொடர்ந்து ஹீரோவாக பார்க்க வழிவகை செய்யும் என்று சந்தேகம் இல்லை.