சாத்தான்குளம் சம்பவ தொடர்பாக ஒருவரும் தப்ப கூடாது என நடிகர் சூர்யா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சாத்தான்குளத்தை சேர்ந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் மரணத்துக்கு பலரும் நியாயம் கேட்டு ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரத் அத்துமீறல் முடிவுக்கு வரவேண்டும் என்ற தலைப்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் அத்துமீறல் காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது.
அதிகார அமைப்பின் அலட்சியம்:
போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, நலமாக இருப்பதாக சான்று அளித்திருக்கிறார். நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல் இயந்திரகதியில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய கடமை மீறல் செயல்கள் ஒரு குடிமகனின் உரிமையில் நம் அதிகார அமைப்புகள் காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற மரணங்கள் ஒரு வகையில் திட்டமிட்ட குற்றமாக நடக்கின்றது.
நீதியின் முன் நிறுத்த்தி தண்டிக்கபட வேண்டும்:
ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால் போலீசாரின் இந்த கொடூரத் தாக்குதல் நம் கவனம் பெறாமலே பேயிருக்கும். பாதிக்கப்பட்டவர் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் போலீசார் எதிர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கான வாழும் சாட்சியாக இருப்பார்கள. தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்த சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள். இந்த கொடூர மரணத்தில் தங்களுடைய கடமையைச் செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்க வேண்டும். உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவது நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது:
இதேபோல தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்கின்ற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் மக்களிடம் உருவாக்க வேண்டும். மாறாக நமது அதிகார அமைப்புகள் அவ நம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன. இரண்டு அப்பாவின் மரணத்திற்கு பிறகும் உடனடியாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கை சம்பந்தப்பட்ட போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது மட்டுமே. ஆயுதப்படையில் பணியாற்றுவது என்பது தண்டனை கால பணியாக பொதுமக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை இது உருவாக்குகின்றது. இரண்டு உயிர் போவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு இதுதான் தண்டனையா ? என்று எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
காவல்துறைக்கு தலைவணங்குகிறேன்:
காவல்துறையின் அர்ப்பணிப்புடன் தன் கடமையைச் செய்கின்ற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஒட்டுமொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்ற இந்த நேரத்தில் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர். கொரோனா யுத்தகளத்தில் முன்வரிசையில் இருக்கின்ற காவல்துறைக்கு தலைவணங்குகிறேன். அதே நேரம் அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகார அத்துமீறல் வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும் அக்கறையும் கொண்டு கடமையைச் செய்கின்ற காவல்துறையினரே மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
நீதி நிலை நிறுத்தப்படும் :
ஒரு நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. தந்தையையும், மகனையும் இழந்து வாடுகின்ற அந்தக் குடும்பத்தினரின் துயரில் நானும் பங்கு எடுத்துக் கொள்கிறேன். இனிமேல் இதுபோன்ற அதிகார வன்முறைகள் காவல்துறையில் நிகழாமல் தடுக்க தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்புமிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். குற்றம் இழைத்தவர்களும் அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு நீதி நிலை நிறுத்தப்படும் என்று பொது மக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன் அன்புடன் சூர்யா என்று இரண்டு பக்க அறிக்கையை சூர்யா வெளியிட்டுள்ளார்.
’நீதி நிலைநிறுத்தப்படும்’ என்று நம்புவோம். #JusticeForJayarajandBennicks pic.twitter.com/oAgZbZVe9h
— Suriya Sivakumar (@Suriya_offl) June 27, 2020