மலை கிராமம் ஒன்றில் கொரோனா அச்சம் இல்லாமல் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்
உலக நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றினால் வல்லரசு நாடுகளே முடங்கி இருக்கும் சூழ்நிலையில் ஐரோப்பிய மலை கிராமம் ஒன்றில் கொரோனா அச்சமின்றி தங்களது அன்றாட பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். போஸ்னியா நாட்டில் அமைந்துள்ள மலையில் 1500 மீட்டர் உயரத்தில் லுகோமிர் மலை கிராமம் அமைந்துள்ளது. இது நாட்டின் மிக உயர்ந்த கிராமமாக கருதப்படுகின்றது. இங்கு வசித்து வரும் மக்களுக்கு கால்நடை வளர்ப்பு முக்கியமான தொழில் ஆகும் .
போஸ்னியா நாட்டின் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய மார்ச் மாதம் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வெளியில் பொது இடங்களுக்கு மக்கள் செல்லும்போது முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் என இருந்த நிலையில் லுகோமிர் கிராமத்தில் முதியவர்கள் கூட கையுறை, முக கவசம் அணியாமல் தங்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர். நகரங்களை விட்டு மிகவும் தொலை தூரத்தில் இந்த கிராமம் அமைந்திருப்பதால் போர் போன்ற எந்த நெருக்கடியிலும் இவர்கள் சிக்காமல் அவர்களது பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.
உறைபனிக்காலத்தில் மட்டும் இங்கு வசித்து வருபவர்கள் குடும்பத்துடன் சென்று அருகில் இருக்கும் சராஜிவோ பகுதியில் தங்குவது வழக்கம். அவ்வகையில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பாகவே அங்கிருந்து தங்கள் மலை கிராமத்திற்கு திரும்பிய மக்கள் அச்சமின்றி அன்றாட பணிகளை தொடர்ந்து வருகின்றனர். சாகச வீரர்களுக்கான சுற்றுலாத் தலமாக திகழும் இந்த கிராமத்தில் கொரோனாவினால் சுற்றுலா பயணிகளின் வருகை நின்றுபோனது.
ஆனால் அங்கு வசித்து வரும் மக்கள் அமைதியாக அவர்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் .போஸ்னியாவில் கொரோனா தொற்று பரவுவது குறைந்திருப்பதால் இம்மாத தொடக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனைத்தொடர்ந்து சராஜிவோ பகுதிக்கு ஆஸ்திரியா, ஜெர்மனி, செர்பியா போன்ற நாடுகளில் இருந்து விமான சேவை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.