Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

8 வயதில் இத்தனை திறமைகளா? ஆச்சரியப்பட வைக்கும் சகலகலாவல்லவி லத்திகா!

ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல இடைவெளியின்றி கோர்வையாக பேசிக்கொண்டிருக்கும் லத்திகா ஸ்ரீ… திருக்குறள், குறிஞ்சி பாடலில் வரும் பூக்களின் பெயர்கள் என ஒவ்வொன்றாக உச்சரிக்கும்போது அதன் தமிழ் வாசத்திற்கு வண்ணத்துப்பூச்சிகளும் படையெடுக்கத்தான் செய்கின்றன…

எந்த பொருளைக் கண்டாலும் குழந்தைகளின் மனதில் ஆசை துளிர்விடும். அதனைத் தனதாக்கிக்கொள்ள அவர்களின் மனம் போராடும். அப்படித்தான், லத்திகா என்ற சிறுமியின் மனதிற்குள்ளும் நிறைய ஆசைகள் துளிர்விட்டன.

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் சசீந்திரன், தனம். சசீந்திரன் துறையூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவருகிறார். தற்போது எளம்பலூர் சாலையில் வசித்து வரும் இவர்களின் மூத்த மகள் லத்திகா ஸ்ரீ. தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயிலும் லத்திகா ஸ்ரீக்கு (8) பேசிக்கொண்டே இருப்பதுதான் இயல்பு. ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல இடைவெளியின்றி கோர்வையாக பேசிக்கொண்டிருக்கும் லத்திகாவை தடுக்க அவளுடைய பெற்றோருக்கும் மனமில்லை.

அவளின் பேச்சுத் திறனைக் கொண்டே அவளுடைய எதிர்காலத்தை பண்படுத்த வேண்டும் என நினைத்தனர் அவளுடைய பெற்றோர். இதனால் அவளுக்கு திருக்குறளைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினர். தனது 5ஆவது வயதிலேயே லத்திகா 1330 குறள்களையும் ஒப்புவித்து அனைவரையும் மலைக்கவைத்தார். தற்போது குறிஞ்சிப்பாட்டில் உள்ள 98 வகை பூக்கள் பெயரையும் ஒப்புவிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளார்.

8 வயதில் இத்தனை திறமைகளா? ஆச்சரியப்பட வைக்கும் சகலகலாவல்லவி லத்திகா!

இது மட்டுமில்லாமல் கீ போர்டு வாசித்தல், பாட்டு பாடுதல், கதை சொல்லுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வளர்த்துவரும் லத்திகாவை சகலகலாவல்லவி என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தன் திறமைகளை வெளிப்படுத்துவதோடு மக்களுக்கும் உதவி செய்துவருகிறார், இந்த சுட்டிக் குழந்தை.

கரோனா விழிப்புணர்வு :

கரோனா நெருக்கடியால் கிடைத்த விடுப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய காணொலிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கரோனா வைரஸ் விழிப்புணர்வு, மரபு சார்ந்த பொருள்களான மண்பாண்ட சமையல் அதன் பயன்கள் குறித்து என அவ்வப்போது வீடியோ வெளியிட்டுவருகிறார். ’தினம் ஒரு திருக்குறள்’ என்ற பாணியில் நாள்தோறும் ஒரு குறளும், அதன் விளக்கமும் என தமிழ் மகள் என்ற பேஸ்புக் பக்கத்தில் காணொலி வெளியிட்டுவருகிறார்.

இது தவிர, தனது பெற்றோருடன் 3 ஆயிரம் முகக்கவசங்களை இலவசமாக பொதுமக்களுக்கும் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். லத்திகாவின் திறமைகளை சமூக வலைதளங்களில் பார்த்த குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்டி ராமச்சந்திரன், அவரை நேரில் அழைத்து பாராட்டியதோடு பரிசாக கைப்பேசி ஒன்றையும் கொடுத்துள்ளார்.

“என் மகளுக்கு சின்ன வயதிலிருந்தே பேசுவதில் ஆர்வம் அதிகம். பேசிக்கொண்டே இருப்பாள். அதை நல்ல முறையில் பயன்படுத்தினால் என்ன? என்ற எண்ணம்தான் தற்போது லத்திகாவை வெளியுலகத்திற்கு காட்டியுள்ளது. அவள், தமிழ் சார்ந்த படைப்புகளில் அறிவு மிக்கவராக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஊக்குவிக்கிறோம்” என்கிறார் லத்திகாவின் தாய்.

லத்திகாவிடம் உனக்கு என்ன ஆக ஆசை எனக்கேட்டால், “நான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வேன். அதைப் போலவே நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு சிறந்த பேச்சாளராகி தமிழுக்கும் சேவை செய்வேன்” எனப் பதிலளித்து வியக்க வைக்கிறார்.

Categories

Tech |