Categories
மாநில செய்திகள்

சாத்தான்குளத்தில் உயிரிழந்த வணிகர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் – ப.சிதம்பரம் ட்வீட்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த தந்தை, மகனாகிய ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை நடத்தி வருகின்றனர். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறை சாலையில் அடைத்தனர். இந்நிலையில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், சாத்தான்குளம் சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையே உகந்தது, இருந்தாலும் சிபிஐ விசாரணையை வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 1996 டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டியுள்ள அவர், தூத்துக்குடியில் காவல் துறையினர் கைது செய்து காவலில் இருக்கும்போது மரணம் அடைந்த இரண்டு வர்த்தகர்களுக்கு (தந்தை, மகன்) நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்பொழுது பிறந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |