ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீடு செய்வது எப்படி? என்பது குறித்து விளக்கமளித்து எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரருக்கும், மின் வாரியத்திற்கும் இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் அளவீடு மற்றும் கணக்கீட்டு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
கொரோனா பரவல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தாழ்வழுத்த மின்நுகர்வோர் முந்தைய மாதத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் அடிப்படையில் இந்த இரு மாதங்களுக்கும் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்பொழுது இரு மாதங்களுக்கும் சேர்ந்து மின்சார பயனீட்டு அளவு அடிப்படையில் தொகை வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒருவேளை அதிகமாக செலுத்தியிருந்தால் அடுத்த மாதத்திற்கு செலுத்தப்படவேண்டிய தொகையில் கழித்துக்கொள்ளலாம் எனவும் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், முந்தைய மின் அளவீட்டின் படி முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ரசீதாகவும், மீத யூனிட்டுகளை அடுத்த 2 மாதங்களுக்கான கட்டணமாக நிர்ணயிக்க தனியாக ரசீதுகளை தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் மின்வாரியம் தரப்பில், கடந்த 22ம் தேதி பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், வீட்டு உபயோக மின்சாரத்தில், 100 முதல் 200 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்திய நுகர்வோர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.2.50 காசுகள் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து 200 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தப்படும் போது யூனிட்டுக்கு ரூ.3 என கட்டணங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதேபோல 2 மாதத்திற்க்கு 500 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ.6.60 காசுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு மானியத்தை சேர்ந்து முதல் 100 யூனிட்டுக்கு குறைவான மின் பயனீட்டாளருக்கு எந்த ஒரு மின்கட்டணமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கட்டணங்கள் அடிப்படையிலேயே மின்சார கணக்கீடு எடுக்கப்படுவதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் எந்த வித விதிமீறல் இல்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் மனுதாரர் குறிப்பிட்டது போல முந்தைய மின் பயன்பாடும், தற்போதைய மின்பயன்பாட்டிற்கும் உள்ள விகிதாச்சாரங்கள் எந்த விதமான இழப்பீடுகளையும் ஏற்படுத்தாது என கூறியுள்ளது. உரிய முறையில் மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மின்கட்டணத்தை செலுத்த அவ்வப்போது கால அவகாசம் நீடிக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படுவதில்லை நீதிமன்றத்தில் கூறிய மின்வாரியம், இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கோரிக்கை வைத்துள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணை 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த காலகட்டத்தில் மின்கணக்கீடு செய்வது குறித்து விளக்கமளிக்க மின்வாரியத்திற்கும், மனுதாரருக்கும் உத்தரவிட்டுள்ளது.