காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும் என மருத்துவர்கள் நிபுணர் குழு அறிவுறுத்தியுள்ளது.
மணம், சுவையை உணரவில்லை என்றாலும் உடனே சிகிச்சைக்கு வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை மருத்துவக் குழுவினர் சந்தித்தனர். அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனையில் பரிந்துரைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், கொரோனா தொற்றை கண்டு மக்கள் அச்சமடைய தேவையில்லை எனக் கூறியுள்ளனர். அறிகுறி தெரிந்த உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், பாதிப்பு அதிகமாகும் வரை மக்கள் காத்திருக்க கூடாது என தெரிவித்துள்ளனர். 80% நோயாளிகளுக்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.
கொரோனா தொற்று பரவல் சங்கிலியை துண்டிப்பதே அவசியம் என நிபுணர்கள் குழு அறிவித்துள்ளது. ஊரடங்கு என்பது கொசுவை கொல்ல கோடாரியை பயன்படுத்துவது போன்றது என்றும், ஊரடங்கு என்பது பெரிய ஆயுதம், தற்போது அது தேவையில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். எதாவது ஒரு அறிகுறி இருந்தால் கூட மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது நல்லது.
தொடர்ந்து மக்கள் காய்ச்சல் முகாமிற்கு செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என கூறியுள்ளனர். இந்தியாவிலேயே, இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் இடங்களில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளதாக கூறியுள்ளனர். நோய் எதிர்ப்பு உயிரணுவை கண்டறியும் அதிவிரைவு பரிசோதனை தேவையில்லை. தற்போது நாளொன்றுக்கு தமிழகத்தில் 32,000 பிசிஆர் பரிசோதனைகள் நடக்கின்றன. எனவே தற்போதைய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையே போதுமானது என குறிப்பிட்டுள்ளனர்.