சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டது. தற்போது வரை கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சத்துணவையே பெரும்பகுதி நம்பி பள்ளிகளுக்கு வந்து படிப்பை படித்து வந்தனர்.
மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு இந்த சத்துணவானது பெரிதும் உதவியாக இருந்தது. தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்காததால் இந்த சத்துணவு நடைமுறை பாதிக்கப்பட்டு இருப்பதால், பாதிப்பிற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், சத்துணவை உண்டு வந்த மாணவர்களின் வங்கி கணக்கில் அவர்கள் உண்ணும் உணவிற்கான பணம் செலுத்தப்படும் என தமிழக அரசு சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.