சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவலறிக்கையில் முரண்பாடு இருப்பது வெளியாகியுள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறை கொடூரமாக தாக்கியதால் தான் இவர்கள் இருவரும் மரணம் நிகழ்ந்துள்ளது என்று பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக அரசாங்கம் கூட இந்த மரணத்திற்கு நிவாரணம் வழங்கி உள்ளது. இது தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது . அது போலீசார் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைக்கு மாறாக இருப்பதாக தெரிகின்றது. அருகில் உள்ள கடையில் உள்ள CCTV வீடியோ பதிவில் சாத்தான்குளம் போலீசார் வந்து அழைக்கிறார்கள், அப்போது ஜெயராஜ் காவலரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். பின்னர் வண்டியில் ஜெயராஜை அழைத்துச் செல்கிறார்கள்.
அதனை தொடர்ந்து பென்னிக்ஸ் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு, அதில் ஒருவரை ஏற்றிக்கொண்டு காவல் நிலையம் செல்கிறார். இதுபோன்ற பதிவு தான் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. ஆனால் போலீசார் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கடைக்கு அருகே அவர்கள் தரையில் உருண்டு பிரண்டதால் உள் காயம் ஏற்பட்டுள்ளது என்று பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது வெளியான வீடியோ பதிவில் அப்படி எதுவும் நிகழவில்லை காவல்துறை அழைத்ததும் ஜெயராஜ் போலீஸ் வாகனத்தில் ஏறி செல்கிறார். இதனால் போலீஸ் பதிவு செய்துள்ள முதல் தகவலறிக்கையில் பெரிய முரண்பாடு உள்ளதாக விவாதமும், கேள்வியும் எழுந்துள்ளது.