பொது முடக்கத்தை நீடிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் அரசு தன்னுடைய முடிவினை மேற்கொள்ள இருப்பதாகவும், இன்று மாலைக்குள் அதை அதிகாரபூர்வமாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் சொல்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு இருக்கக்கூடிய கள நிலவரத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் இந்த 5 மாவட்டங்களில் அரசு சார்பில் அதிகாரபூர்வமாக ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதால் அங்கு முழு முடக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே போல மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அரசு தன்னுடைய முடிவை மேற்கொள்ளலாம் என்றும், பொது முடக்கத்தை நீடிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரப்படி தமிழக அரசே இந்த முடிவினை எடுக்கும் என்றும் சற்று நேரத்துக்கு முன்பாக கூட ஐ.சி.எம்.ஆர் பிரதிநிதி, மருத்துவ நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள பிரதீப் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.