தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஜூலை 31ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு ஆணை பிறப்பித்துள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 4 மாவட்டங்களிலும், மதுரையிலும் ஜூலை 5ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.. இதே வேளையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில், மின்சார ரயில்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.. இந்த நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சள் குளங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், சுற்றுலாத் தளங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதம் சார்ந்த கூட்டங்கள், வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள சிறு கோயில்கள், சிறு மசூதிகள், தேவாலயங்களில் மட்டுமே பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதியளிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு சென்றுவரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும் இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து இருக்கும்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அத்துறையைச் சார்ந்த நிறுவனங்களில் 50 சதவிகித பணியாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 சதவிகித இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு சாப்பிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.. சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 வரை இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகளும், வாடகை டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் பயணிக்கலாம்.
சலூன் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியை பயன்படுத்தாமல் இயங்கலாம். மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயங்கலாம்.. மேலும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.