டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்துவதற்கான புதிய செயல்முறையை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி, தலைநகரான டெல்லியில் இதனுடைய பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த பாதிப்பை தடுப்பதற்காக டெல்லி மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேரும் நோயாளிகளைக் கவனிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் ஒரு சில தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கொரோனாவை அழிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை அம்மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு 5 பாயிண்ட் கோவிட் 19 மேலாண்மை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி டெல்லியில் வீடுவீடாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று தொண்டைவலி, வறட்டு இருமல் , கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களையும் மற்றும் சமீபத்தில் வெளியூர்களில் இருந்து பயணம் மேற்கொண்டு டெல்லிக்கு வந்தவர்கள் ஆகியோரின் தகவல்கள் அவர்களது சளி மாதிரி சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கொரோனாவை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஏராளமான ஆட்கள் தேவைப்படுவதால், தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் இதில் பணிபுரிய நினைத்தால் தாராளமாக பணி புரியலாம் என்று அவர்களையும் பணியில் அமர்த்த டெல்லி மாநில அரசு தயார் நிலையில் இருக்கிறது.இத்திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அம்மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.