ஆந்திர மாநிலத்தில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்து பெட்ரோல் எடுத்துக் கொண்டிருந்த மக்களை காவல்துறையினர் எச்சரிக்கையுடன் அனுப்பிவைத்தனர்.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள கங்கவரம் துறைமுகத்தில் இருந்து காக்கிநாடா பகுதியை நோக்கி பெட்ரோல் முழுமையாக நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி , விஜயவாடா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டிய ஓட்டுநர் படுகாயமடைந்தார். லாரி கவிழ்ந்த விபத்தில் அதனுடைய டேங்கரில் சிறிது விரிசல் ஏற்பட அதன்மூலம் வேகமாக கசிந்த பெட்ரோலை அக்கம் பக்கத்தில் இருந்த மக்கள் பெரிய கேன்களிலும், பாட்டில்களிலும் பிடித்து தங்களது வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
பின் விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஆபத்தை அறியாமல் அங்கே பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் அறிவுரை கூறி உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குச் செல்லுமாறு எச்சரித்து அனுப்பினர். இதில் சிலர் ஆடை முழுவதும் பெட்ரோல் சொட்ட சொட்ட நனைந்த படி வந்தனர். மேலும் லாரி முழுவதும் பெட்ரோல் நிரப்பி இருந்ததன் காரணமாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.