விமானங்கள் தரையிறங்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு புகாரளித்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் விமானங்கள் தரை இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என திமுக வின் சார்பில் இளங்கோவன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனுவில் வெளிநாட்டில் சிக்கியிருக்கக்கூடிய இந்தியர்களை மீட்பதற்காக 3 கட்டங்களாக 1,248 விமானங்கள் இயக்க உள்ளதாகவும், ஏற்கனவே 2 கட்டங்களாக பல்வேறு பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 17,707 தமிழர்கள் அழைத்து வரப்பட்டதாகவும், அந்த பதில் மனுவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது..
இன்னும் 27,000 தமிழர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், மத்திய அரசு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. இந்த வழக்கானது நேற்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் தரப்பில் ஆஜரான ஜெனரல் இது போன்ற வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்படுவதாகவும், தமிழக அரசு விமானங்கள் தரை இறங்க அனுமதி மறுப்பதாகவும் புகார் தெரிவித்தார்.
மேலும் வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரக்கூடிய தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் விமானங்களில் தரையிறங்கி தமிழகம் வருவதாகவும் தெரிவித்தார். இதுபோன்று தமிழகத்தில் வந்து விமானங்கள் தரை இறங்க அனுமதி மறுப்பது ஏன் என்று தமிழக அரசுதான் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்..
தொடர்ந்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெளிநாடுகளில் சிக்கி இருக்கக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் எப்போது அழைத்து வரப்படுவார்கள் என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இயங்ககூடிய விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் ஏராளமானவர்கள் தமிழகத்திற்கு ஏற்கனவே திரும்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து விமானங்கள் தரையிறங்க அனுமதி அளித்தது குறித்து கூடுதல் விவரங்களை அரசிடம் கேட்டு தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைத்துள்ளனர்.. இன்றைக்கு தமிழக அரசு சார்பில் இதுபற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.