திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களிடம் இருந்து வந்த தொடர் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த அதிகாரிகள் அறிவாற்றல், நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கின் போது முன்களப் பணியாளர்களாக இருந்து வரும் காவலர்கள் திறம்பட செயல்படுவதாக பல்வேறு பாராட்டுக்களை பெற்று வந்தனர்.
இதற்கு ஒரு கரும்புள்ளி சம்பவமாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம் மாறியுள்ளது. தந்தை, மகன் மரணமடைந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என மாநில அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதையடுத்து பொதுமக்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள், கோபப்படுபவர்கள் யார் யார் என்ற பட்டியலை தயாரிக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டமாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக திருச்சி சரகத்தில் அதாவது திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பொதுமக்களிடம் கண்டிப்புடனும், அவர்களை தேவையின்றி தாக்கும் காவல்துறை அதிகாரிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 80 கால்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார். இவர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அதன் பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.