மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்த கண்ணபிரான் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் கடை இயங்கி வருகிறது. ஊரடங்கு காரணமாக கடை பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பூட்டியிருந்த கடையிலிருந்து புகை வெளிவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதையடுத்து விரைந்து செயல்பட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது கடையில் அனைத்து பொருட்களும் தீப்பிடித்த நிலையில் எரிந்துகொண்டிருந்தது.
அவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், கடையின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் கட்டுக்கடங்காமல் தீ வேகமாக பரவியது. எனவே தாம்பரம் சானிடோரியம் தீயணைப்பு துறையினரும் வந்து சேர்ந்து போராடி தீயை அணைத்தனர். கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. கடையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.