Categories
ஈரோடு திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேரிகார்டுகள் மீது மோதிவிட்டு… நிற்காமல் சென்ற லாரி… விரட்டிச்சென்ற காவலருக்கு ஏற்பட்ட சோகம்..!!

சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி டிரைவரை துரத்திப் பிடிக்க முயன்ற காவலர் அந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு.. இவருக்கு வயது 25 ஆகிறது.. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.. தற்போது இவர் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 29) காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதற்கிடையே ஈரோடு மாவட்டம் நொய்யல் சோதனைச்சாவடியில் கண்டெய்னர் லாரி ஒன்று பேரிகார்டுகள் மீது மோதி தள்ளியபடி நிறுத்தாமல் வேகமாகச் சென்றது. இது குறித்து உடனே போலீசார் திட்டுப்பாறை சோதனைச்சாவடிக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, அந்தக் கண்டெய்னர் லாரியை மடக்கிப் பிடிப்பதற்காக போலீசார் தயாராக இருந்தனர். ஆனால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி திட்டுப்பாறை சோதனைச் சாவடியிலும் நிற்காமல் சென்றது.

அதனைத்தொடர்ந்து சோதனைச்சாவடியில் பணியிலிருந்த பிரபு தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக லாரியை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்தார்.. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த லாரி பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே லாரி டிரைவர் வேறு பாதையில் ஈரோடு நோக்கிச் சென்றார். ஆனால் காங்கேயம் பகுதி போலீசார் லாரியை துரத்தி, ஈரோடு மாவட்டம் ஓடாநிலை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் டிரைவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (40) என்பதும், மதுபோதையில் அவர் லாரியை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காங்கேயம் போலீசார் லாரி ஓட்டுநரைக் கைதுசெய்தனர்.

Categories

Tech |