Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்சின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உத்தரவு!!

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மரணம் தொடர்பான வழக்கு ஆவணங்களும் சற்று நேரத்தில் நெல்லை சரக டிஐஜியிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த பிரேதப்பரிசோதனை அறிக்கை, வழக்கு ஆவணங்களை உடனே சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் டிஐஜி ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளனர்.

ஆவணங்கள், பிரேதப்பரிசோதனை அறிக்கையை பெற்று இன்று மாலையே விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரத்தை சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்கும் வரை சிபிசிஐடி இதுகுறித்து விசாரிப்பர் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

மேலும் இன்றே விசாரணையை தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நேரடி விசாரணை நடத்தி வந்த மாவட்ட மாஜிஸ்திரேட் தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் குறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்-ஐ போலீஸ் விடிய விடிய தாக்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை இருந்ததாக காவலர் கூறியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் லத்தியை கேட்டபோது ஒரு காவலர் தப்பியோட்டம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தானாகவே அழியும் வகையில் செட்டிங் செய்யப்பட்டுள்ளதும் அம்பலமானது.

இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்த நீதிபதிகள், மாஜிஸ்திரேட் அளித்துள்ள ஆவணங்கள், மற்றும் பிரேதபரிசோதனை அறிக்கைகளை கொண்டு இன்று மாலையே விசாரணையை தொடங்க வேண்டும் என சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |