காதலை ஏற்காததால் டிக் டாக் பிரபலம் தனது பியூட்டிபார்லரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹரியானா மாநிலத்தில் குண்டில் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலோவெர்ஸ் கொண்ட டிக் டோக் பிரபலம் சிவானி என்பவர் அழகு நிலையம் நடத்தி வந்தார். அவருடன் சேர்ந்து நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீரஜ் அழகு நிலையத்திற்கு சென்ற சமயம் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து அழகு நிலையம் முழுவதும் சோதித்துப் பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த படுகையில் இறந்த நிலையில் சிவானி மிகவும் கொடூரமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நீரஜ் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொள்ள தொடங்கினார்.முதற்கட்ட விசாரணையில் சிவானி கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது செல்போன் தொலைந்து போனது தெரிய வந்துள்ளது. இதனிடையே சிவானியின் பெற்றோர் ஆரிப் என்ற இளைஞன் மீது புகார் கொடுத்துள்ளனர். கடந்த மூன்று வருடங்களாக சிவானியின் பின் வந்து காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் சிவானி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இதனால் சில தினங்களாக ஆரிப் மற்றும் சிவானி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிவானியின் பெற்றோர் ஆரிப் மீது புகார் அளிக்க காவல்துறையினர் அவரை அழைத்து கண்டித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது சகோதரியின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்றை சிவானி அனுப்பியிருந்தார். அதில் ஆரிப் தன்னை பார்க்க வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். பின்னர் அன்று இரவு வீட்டிற்கு வரவில்லை. ஆனால் அவரது சகோதரி வாட்சப் எண்ணிற்கு தான் ஹரித்வாரில் இருப்பதாகவும் 3 நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாகவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையிலையே இரண்டு தினங்களுக்கு பிறகு சிவானியின் உடல் அழகு நிலையத்தில் கிடைக்கப்பெற்றுள்ளது. இதையடுத்து ஆரிப் சிவானியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு அவரது அலைபேசியில் இருந்து செய்தி அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ள, அவர் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தன்னை தொடர்ந்து அவமதித்து வந்ததால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.