18 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஜப்பான் அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வர, இதற்கு தற்போது வரை தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தப்பிப்பதற்கான ஒரே வழியாக ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதன்படி நாட்டு மக்களுக்கு பயணம் மேற்கொள்ள தடை, சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், முக்கிய நடவடிக்கையாக பிற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. அதன்படி, அமெரிக்காவில் ஹச்1 விசா பதிவுக்கு இந்த ஆண்டு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தற்போது ஜப்பான் அரசு அதிரடி முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜப்பான் நாட்டு மக்கள் 18 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. மீறி அந்த நாடுகளுக்குச் செல்ல வேண்டுமெனில் அத்தியாவசிய அல்லது மனிதாபிமான காரணங்களுக்காக மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை விதிக்கப்பட்ட 18 நாடுகளின் பட்டியலை இன்று வெளியிட உள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.