திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பில்டிங் சொசைட்டி தெருவில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். எல்ஐசி முகவராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகாமி சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் – மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கியுள்ளனர். பின்னர் இன்று காலை இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது மகள் இது குறித்து வத்தலகுண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்துள்ளார்.. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் 2 பேரும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
கணவன் – மனைவி இருவரும் திடீரென தற்கொலை செய்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்பத்தகராறு, பொருளாதார நெருக்கடியின் காரணமாக தற்கொலை செய்துகொண்டார்களா? என்ற கோணத்தில் வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.