சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் கொடுத்து அறிக்கைகள், சாட்சியங்கள், சிசிடிவி பதிவுகள், காவல் நிலையத்தில் எடுக்கப்பட்ட விசாரணைகள் என அனைத்தும் முழுமையாக எடுக்கப்பட்ட பிறகு தான் இந்த வழக்கு விசாரணை வேகம் பிடித்தது. இதனையடுத்து தற்போது சம்மந்தபட்ட 6 காவலர்கள் 302 பிரிவு ( கொலை ) உட்பட நான்கு பிரிவுகள் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகிய எஸ்.ஐ ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை சம்மந்தப்பட்ட 6 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்கள். காவல் நிலைத்தில்பணியாற்றிய மொத்த காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கில் முக்கியமாக இரண்டு காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன், இரு தலைமை காவலர், ஆய்வாளர் என மொத்தம் 5 பேரும், பின்னர் மாஜிஸ்திரேட்டிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காவலர் முருகன் என 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 6 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த வழக்கில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக அவர் விசாரணை கஸ்டடியில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு உதவி ஆய்வாளரும் அவரது ஊரில் சிபிசிஐடி கட்டுப்பாட்டில் உள்ளனர், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி வருகின்றது. இது கைது நடவடிக்கையா ? அல்லது விசாரணை கஸ்டடியா ? என்று இன்னும் சிறிது நேரத்தில் தெரியவரும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கிறார்கள். அது மட்டுமல்லாது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.