சாத்தான்குளம் காவல் சித்ரவதை மரண வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 காவல் உதவி ஆய்வாளர், 2 காவல் அதிகாரிகள் உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று காலை முதல் இந்த வழக்கு விசாரணை அதிரடியாக நடைபெற்று பரபரப்பை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் தற்போது சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நாளை காலை 11 மணிக்கு சாத்தான்குளம் காவல்வதை படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாது. உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடியே விசாரிக்க வேண்டும் என்று கோரி வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு சாத்தான்குளம் காவல்வதை படுகொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கூடாதென விசிக சார்பில் வாசலிருப்பு ஆர்ப்பாட்டம். #zoom இணைப்பில் பங்கேற்கலாம். இணைவதற்கான Id, password இதில் கவனிக்கவும். சூம்- இல் 500 பேர் வரை இணைய இடமுண்டு. #DropCBI #Let_continueCbcidInqiery pic.twitter.com/xu40I4Hc5G
— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 1, 2020